ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதியை ( அரசியில் சாசன சட்டப்பிரிவுகள் 370, 35ஏ) கடந்த 5ஆம் தேதி ரத்து செய்து இந்திய அரசு உத்தரவிட்டது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றியது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதராவை பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்னை குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது, காஷ்மீர் பிரச்னையை இருதரப்பு பேச்சுவார்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வணிகம், பொருளாதாரம் மூலம் இந்தியா-பிரிட்டன் உறவை மேம்படுத்துவது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிப்பது, ஜி-7 உச்சி மாநாடு ஆகியவை குறித்தும் இருநாட்டு தலைர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி புகார் எழுப்பினார். இதற்கு போரிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.