Brexit latest news - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி பிரிட்டன் வெளியேறவுள்ளது. இந்த வெளியேற்றத்தை சுமூகமானதாக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு போட்டுக்கொண்ட பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தத்தில் சில பிரச்னைகள் உள்ளதால் அதனை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
இதனையடுத்து, பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்த ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிதாக பிரெக்ஸிட் ஒப்பந்தமிடுவதற்கு சாத்தியமே இல்லை என பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன், பிரதமர் போரிஸ் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தோல்வியில் முடிந்ததே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் வாசிங்க: இலங்கை அதிபர் தேர்தல் புதிய வரலாறு
இதனிடையே, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை விமர்சித்து ட்வீட் செய்துள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்டு டஸ்க், "ஐரோப்பிய, பிரிட்டன் மக்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒப்பந்தம், காலநீட்டிப்பு உள்ளிட்ட எதுவுமே வேண்டாம் என்று செல்லும் நீங்கள் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என காட்டமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
பிரெக்ஸிட் என்றால் என்ன ?
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறவுள்ளது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள்.
இந்த பிரெக்ஸிட்டானது சுமூகமானதாக அமைய, ஐரோப்பிய ஒன்றியம்-பிரிட்டன் இடையே 2018ஆம் ஆண்டு பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் சில பிரச்னைகள் உள்ளதால் பிரிட்டன் எம்.பி.க்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனதால் கடந்த ஜூன் மாதம் முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தன் பதவியை ராஜினாமா செய்தார்.
தெரசா மேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சனை புதிய பிரதமராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த ஜூலை மாதம் தேர்ந்தெடுத்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமில்லாமலோ பிரிட்டனை (அக்டோபர் 31ஆம் தேதி) வெளியேற்றியே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ள பிரதமர் போரிஸ், அவர் தலைமையில் தாயாராகியுள்ள புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் மீது எம்.பி.க்களின், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெற தீவிரமாக முயன்றுவருகிறார். இதனிடையே, பிரெக்ஸிட் குறித்து போரிஸ் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.