பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர்.
இந்நிலையில் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்காக போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “55 வயதான போரிஸ் ஜான்சன் தொடர்ச்சியான வைரஸ் அறிகுறிகளை கொண்டுள்ளார்” என்றார்.
மேலும், “கரோனா பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்றும் தெளிவுப்படுத்தினார். போரிஸ் ஜான்சன் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.
இருப்பினும் அவ்வப்போது காணொலி வாயிலாக அந்நாட்டு மக்களை தொடர்புகொள்வார். அவரது உடலில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இது கரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளில் ஒன்றாகும். இதனால் அவர் அதிக நேரம் தனிமையில் இருக்க வேண்டும்.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன், “நான் நன்றாக உணர்கிறேன். எனக்கு சிறிய அறிகுறிகள் உள்ளன. ஆகவே என்னை நானே ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த அறிகுறிகள் தொடர்வதால் நான் தனிமைப்படுத்துதலை தொடர வேண்டும்” என புதிய காணொலி செய்தியில் கூறினார்.
முன்பை விட அவர் சோர்வுடன் காணப்படுகிறார். இதற்கிடையில் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர் தேசிய அளவிலான கை தட்டல் உள்ளிட்ட ஒலியெழுப்பும் நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.