வாஷிங்டன்: உக்ரைன் நாட்டின் சாபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது இன்று(மார்ச்.4) ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலால், அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்துவருகிறது.
தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த சாபோரிஷியா அணுமின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான டன் அளவு அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன. இதனால் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " உக்ரைன் நாட்டில் சாபோரிஷியா அணுமின் நிலையம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கியிடம் கேட்டறிந்தார். அத்துடன் அணுமின் நிலையம் உள்ள பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், தீயணைப்பு பணிகளுக்கு இடையூறு அளிக்காமல் இருக்குமாறும் ரஷ்ய அதிபர் புடினுக்கு வலியுறுத்தினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்து
உக்ரைன் நாட்டில் 1986ஆம் ஆண்டில் செர்னோபில் அணுமின் நிலையம் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். ஆனால் வெடிப்பால் ஏற்பட்ட கதிர் வீச்சு காரணமாக 2,000 பேர் இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், தோல்புற்று நோய் உள்ளிட்ட பக்க விளைவுகளால் உயிரிழந்தனர். இந்த பாதிப்பைவிட சபோரோஷியா உலை வெடித்தால், 10 மடங்கு அதிகமாக சேதம் இருக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்