ஜெர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரால் 1939ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர், சுமார் ஆறு ஆண்டுகள் நீடித்து நான்கு கோடிக்கும் அதிகமானவர்களை பலி கொண்டது.
ஆனால், இந்தப் போரில் வீரமரணம் அடைந்த லட்சக்கணக்கானோரின் உடல் தங்களது ஊருக்கு திரும்பவில்லை, மாறாக வனவிலங்குகளைப் போல மண்ணுக்குள் புதைந்துவிட்டன. எனினும், இவர்களை தேடும் பணி மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை!
தாமஸ் ஸ்பெர்ட் போன்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், கடந்த 15 ஆண்டுகளாக இரண்டாம் உலகப் போரில் மாயமான ராணுவ வீரர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெர்மன் நாட்டில் உள்ள கிலேசின் பகுதியில் ஆகழ்வாய்வு நடத்திக் கொண்டிருந்த தாமஸ் ஸ்பெர்டிமிடம் பேசியபோது, "இந்த இடம் பார்ப்பதற்கு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், இது ஒரு பெரும் கல்லறை. அதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது" என்றார்.
முன்னதாக, இதே இடத்தில் 'கிழக்கு ஐரோப்பியாவில் மாயமான ராணுவ வீரர்களைக் கண்டறியும் சங்கம்' நடத்திய ஆய்வில் மண்ணுக்குள் புதைந்துபோன 116 ஜெர்மானிய வீரர்கள், 129 ரஷ்ய வீரர்களின் சடலங்களை மீட்டனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் அல்பெர்ச் லாவ் கூறுகையில், "எல்லாப் பக்கமும் சடலங்கள் தான். முட்டாள்தனமான போரில் உயிரிழந்த வீரர்களே அவர்கள். குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த வீரர்களை தேடுவது எங்கள் நோக்கமல்ல. மண்ணைத் தோண்டி எடுக்கும் போது அது ரஷ்ய வீரரா அல்லது ஜெர்மானிய வீரரா என்று யாராலும் சொல்லமுடியாது" எனத் தெரிவித்தார்.
மீண்டும் ஓர் உலகப் போர் மூண்டால் எத்தகைய மனித உரிமை மீறல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த அகழ்வாய்வுகள் பொட்டில் அறைந்தார் போல் உலகிற்கு உணர்த்துகின்றன. தன்னார்வலப் பணி தொடரட்டும்....
இதையும் படிங்க : கரோனாவை வெல்ல ஆன்டிபாடி கண்டுபிடிப்பு!