2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 4ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று(அக்.11) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்க்ரிஸ்ட், குய்டோ இம்பன்ஸ் ஆகிய மூவரும் வென்றுள்ளனர்.
தொழிலாளர் சந்தை குறித்த விரிவான ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது. தொழிலாளர் சந்தையின் தாக்கம் குறைந்தபட்ச கூலி, குடியேற்றம், கல்வி ஆகியவற்றில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை இந்த ஆய்வு விரிவாகப் பேசுகிறது.
2020ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்கர்களான பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவர் வென்றுள்ளனர்.
இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகள்
2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
பெஞ்சமின் லிஸ்ட் (ஜெர்மனி) மற்றும் டேவிட் மேக்மில்லன் (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த மரியா ரெசா, ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முராட்டோ ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தடுப்பூசி போடாமல் உள்ளே நுழையக் கூடாது - அதிபருக்கே அதிர்ச்சி!