2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று (அக்.5) முதல் அறிவிக்கப்படு வருகின்றன. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெயின்ஹார்ட் கென்சல் (ஜெர்மனி), ஆன்ட்ரியா கேஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
கருந்துளை(பிளாக் ஹோல்) உருவாக்கம் தொடர்பான கண்டுபிடிப்புக்காக ரோஜர் பென்ரோஸ்க்கும், பால்வெளிக்கு (Milky way galaxy) நடுவே உள்ள பொருள்களை கண்டுபிடித்தற்காக ரெயின்ஹார்ட் கென்சல், ஆன்ட்ரியா கேஸ் ஆகியோருக்கும் இந்தாண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசுத் தொகையான சுமார் 8.22 கோடி ரூபாயில் பாதித்தொகை ரோஜர் பென்ரோஸ்க்கும், மீதமுள்ள தொகை ரெயின்ஹார்ட் கென்சல், ஆன்ட்ரியா கேஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, இயற்பியலாளர்கள் ஜேம்ஸ் பீப்லெஸ், மிச்செல் மேயார், டிடியர் குயல்ஸ் ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.
நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா), மைக்கெல் ஹாட்டன் (பிரிட்டன்), சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
வேதியலுக்கான நோபல் பரிசு நாளை(அக்.7) அறிவிக்கப்படவுள்ளது.