கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்களது வேலைகளை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தாண்டு கரோனா வைரஸ் காரணமாக மேலும் 132 மில்லியன் மக்கள் பசியால் வாடக்ககூடும் என்றும், பலர் இதனால் இறப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், 'இந்த ஆண்டு உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பெரும் பகுதிகளில், பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சுமார் 690 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றினால், இந்தாண்டு போதிய உணவில்லாமலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் மேலும் சுமார் 132 மில்லியன் மக்கள் பதிக்கப்படக்கூடும். இதே நிலை நீடித்தால் 2030ஆம் ஆண்டிற்குள் போதிய உணவின்றி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 830 மில்லியனாக உயரும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.