உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டுவரும் நிலையில் கரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹான் நகரில் இயல்பு நிலை மெல்லத் திரும்பிவருகிறது. கடந்த நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் பகுதியில் முதலில் பரவத் தொடங்கிய கரோனா டிசம்பர் மாதத்தில் அந்த மாகாணம் முழுவதும் பரவியது. அடுத்த சில நாட்களில் ஒட்டுமொத்த சீனாவிலும் பரவும் அபாயம் எழவே, ஒட்டுமொத்த வூஹானும் சீனாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்கள் தீவிர முயற்சிக்கு பின் அங்கு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக வூஹானில் புதிய கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு நகர் முழுவதிலும் நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதார சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
தற்போது வூஹானில் பேருந்து போக்குவரத்து தளர்வு நீக்கப்பட்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்கு பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் உடல்நல சான்றை காண்பிக்க வேண்டும் எனவும், மருத்துவ அலுவலர்களின் சோதனைக்குப் பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சீனாவில் கரோனா வைரஸால் 81 ஆயிரத்து 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்