சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு சீனாவிடமிருந்து பதில் கிடைத்ததையடுத்து, உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று விரைவில் சீனா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "சீனா செல்லவுள்ள குழு குறித்த தகவல்கள் அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும். இக்குழுவிற்கு தலைமை ஏற்கவுள்ள நபர் நாளை சீனா சென்றுவிடுவார். விரைவிலேயே குழுவின் மற்ற உறுப்பினர்களும் சீனா செல்லவுள்ளனர்" என்றார்.
இந்தக்குழுவில் அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாட்டு பிரிவிலிருந்து யாராவது இடம்பெறுவார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இடம்பெறுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
சீனாவில் இதுவரை கரோனா தொற்றால் 811 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்!