பெய்ஜிங்: உலகிலேயே முதல் முறையாக, 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து உலகின் பிற நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தது. இதற்கு சீன அரசு மறுப்புத் தெரிவித்தது.
தொடர் குற்றச்சாட்டுகளால் பதற்றம் நிலவவே, கரோனா எவ்வாறு பரவத்தொடங்கியது என்பது குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கோரிக்கைவிடுத்தன.
இந்தக் கோரிக்கையினை ஏற்ற உலக சுகாதார அமைப்பு, அறிவியல் வல்லுநர் குழுவினர் கரோனா பரவல் குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்வார்கள் என அறிவித்தார்கள்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழு, வரும் வியாழக்கிழமை (ஜன. 14) சீனா வரவுள்ளதாக, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சீனாவில் ஆய்வுப் பணியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானோம் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சீன செய்தித்தொடர்பாளர் ஹா சங்க்யிங், வல்லுநர் குழு ஆய்வுக்கான திட்டப் பணிகள், தேவையான நடைமுறைப் பணிகளைச் செயல்படுத்திவருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: தலிபான் பயங்கரவாத தாக்குதலில் ஆப்கான் படையினர் உயிரிழப்பு