உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பாகிஸ்தானில் மாபெரும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானிற்கான அமெரிக்கத் தூதர் பவுல் ஜான்ஸ் கூறுகையில், கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தங்களது மக்களை இந்தப் பெருந்தொற்றிலிருந்து காக்க அமெரிக்க உதவ முன்வந்துள்ளது.
இதற்காக அமெரிக்கா 8.4 மில்லியன் டாலர்களை பாகிஸ்தானிற்கு அளிக்கவுள்ளது. இந்த நிதியிலிருந்து மூன்று மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு பாகிஸ்தானின் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மூன்று நடமாடும் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். இது பாதிக்கப்பட்ட மக்களின் உடல்நிலையைக் கண்டறிய உதவும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த நிதி மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும், அவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது மருத்துவ தேவைகளையும் பூர்த்திசெய்யவும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிதி பாகிஸ்தானின் பொருளாதார தேவைகளை ஈடுசெய்யும் விதமாகவும், கரோனா வைரசிலிருந்து மக்களை மீட்பதற்கும் உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிற்கு 1.3 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளது.
பாகிஸ்தானிற்கு அமெரிக்கா அளித்துள்ள நிதி இந்தியாவிற்கு அளித்துள்ள நிதியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு 5.9 மில்லியன் டாலர்கள் சுகாதார நிதி