மணிலா: தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் புயல், வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு என ஆண்டு முழுவதும் ஏதேனும் ஒரு இயற்கைப் பேரிடரைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் கரோனா அச்சுறுத்தல் மட்டுமின்றி, புயல்களும் தொடர்ந்து அந்நாட்டைத் தாக்கிவருகின்றன.
இந்த ஆண்டில் 20ஆவதாக பிலிப்பைன்ஸை தாக்கிய கோனி புயலின் வடுக்கள் அழிவதற்கு முன்னதாகவே வாம்கோ என்ற புயல் மீண்டும் பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்டது.
பிலிப்பைன்ஸின் தலைநகர், அதனை ஒட்டிய பகுதிகளில் இந்தப் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. புயலை அடுத்து ஏற்பட்ட சூறாவளிக் காற்றாலும், நிலச்சரிவிலும் சிக்கியும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நிலச்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களைத் தேடும் பணியும், வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
இந்தத் தொடர் பாதிப்பினால் பிலிப்பைன்ஸின் 70 விழுக்காடு பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.