காபூல் (ஆப்கானிஸ்தான்) ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக, அந்நாட்டிலுள்ள ஊடகங்கள் நேற்று (ஆகஸ்ட் 14) செய்தி வெளியிட்டன. இதனை, ஆப்கான் அரசின் முன்னாள் ஆலோசகர் ஷபிக் ஹம்தம் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "நான் பிறந்த ஜலாலாபாத் உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று. அது இப்போது தலிபான்களின் கைகளில் சிக்கியுள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள அப்பாவி மக்களை தலிபான்கள் துன்புறுத்த மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
மொத்த உலகமும் அவர்களை கவனித்துவருகிறது. கடந்த காலங்களில் இருந்ததைப் போல், தற்போது தாங்கள் இல்லை என்பதை தலிபான்கள் நிரூபிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
தலிபான்கள் வேகமாக ஆப்கான் நகரங்களைக் கைப்பற்றிவரும் சூழலில், நேற்று ஆப்கான் அதிபர் அஷ்ராப் கானி, முக்கிய அலுவலர்களுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து அவசரக்கூட்டத்தை நடத்தினார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன், அமெரிக்க நேட்டோ படைகளின் தளபதிகள் ஆப்கான் பாதுகாப்புப் படைகளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஆப்கானின்தானின் அதிபர் அஷ்ராப் கானி, மக்கள் இடப்பெயர்வு, வன்முறையை தடுப்பதில் பாதுகாப்பு படைகள் உறுதியாக ஈடுபடும் என்றார்.
மேலும், கொலைகளுக்கு வழிவகுக்கும் ஆப்கான் மக்கள் மீது திணிக்கப்பட்ட போரை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.
காபூலைச் சுற்றி வளைத்த தலிபான்கள்
நாட்டின் நான்காவது பெரிய நகரமான மஷார்-ஐ-ஷெரீப்பை தலிபான்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றிய நிலையில், நேற்று ஜலாலாபாத்தையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றான காபூல் மட்டுமே அஷ்ரப் கானியின் தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. இந்நிலையில் ஆப்கானின் புறநகர்ப்பகுதியை தலிபான்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
அண்மையில் தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் காபூலைத் தாக்கி கைப்பற்றப்போவது இல்லை எனத்தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 30 நாளில் காபூல் தலிபான்கள் கைவசம்- அமெரிக்காவின் மதிப்பீடு