உத்தரகண்ட் மாநிலம், நைனிடால் (Nainital) நகரில் பிறந்தவர் வொண்டர் நாயல். கல்லூரி மாணவியான இவர், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உலக சமுகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனமான 'French for Tamil' - யில் அங்கம் வகிக்கிறார்.
இலங்கை உள்நாட்டுப் போர் நடந்த மனித உரிமை மீறல் குறித்து அந்நாட்டு அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என 2015ல் ஐநா சபை 4 ஆண்டுக் கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுடன் அந்த அது முடிவடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா சபைக் கூட்டத்தில் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கியது.
இக்கூட்டத்தில் French for Tamil பிரதிநிதியாகப் பேசிய நாயல், "இலங்கை உள்நாட்டுப் பேரில் சுமார் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியாகினர். சுமார் 80 ஆயிரம் பேர் மாயமாகி விட்டதாக நம்பப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தமிழர்களே. இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, அந்நாட்டு அரசு சில நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், ஐநா சபை தீர்மானத்தில் எடுக்கொண்ட 36 வாக்குறுதிகளில் வெறும் ஆறு மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.
தற்போது ஐநா சபை வழங்கியுள்ள 2 ஆண்டுகளில், ஈழத்தமிழர்கள் குறித்து இலங்கை முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 12 ஆண்டுகள் அம்மக்களுக்கு நேர்ந்த அநீதிக்கு உலகச் சமூகம் உறுதுணையாக இருப்பது போலாகிவிடும். அடுத்து 2 ஆண்டுகளில் இலங்கை அரசு போதிய நடவடிக்கை எட்டுக்காதப் பட்சத்தில் அந்நாட்டிற்கு ஐநா அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஐஎஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த நாயல், "இலங்கைக்கு வழங்கியுள்ள 2 ஆண்டுகளில் தீர்வு ஏதும் காணப்படவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வழியில் உதவுவது குறித்து ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.
ஈழத்தமிழர் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க நான் பணம் சேமித்து வருகிறேன். சமீபத்தில் பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐரோப்பிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகை காப்பாற்றுவதற்குப் பட்டமோ, பதவியோ, வேலையோ தேவையில்லை. நம்மிடம் உள்ள வாய்ப்புகள், நேரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு உடனடியாக செயல்பட்டு, நம் குரலைக் கேட்கச் சேய்வேண்டும்" என்றார்.