இலங்கையில் கடந்த 16ஆம் தேதி (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.
இதையடுத்து, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக் கூறி இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவிவிலகினார். தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அந்நாட்டின் முன்னாள் அதிபரும், அவரது சகோதரருமான மகிந்த ராஜபக்ச-வை பிரதமராக நியமித்தார்.
இந்நிலையில், இலங்கையில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி நிலவிவருகிறது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க-வை எதிர்க்கட்சித் தலைராக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அவைத் தலைவருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கட்சி துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, தமிழ் தேசியக் கூட்டணி கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் 50.5 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த சஜித் பிரேதாச-வுக்கு, 80 சதவீத இலங்கைத் தமிழர்கள் வாக்களித்திருந்தனர். மறைந்த முன்னாள் இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் இலங்கை பிரதமரானார் ராஜபக்ச !