கொழும்பு: அடுத்த இரண்டு நாள்களில் சீரம் நிறுவனத்திடமிருந்து 2 முதல் 3 மில்லியன் (30 லட்சம்) ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இலங்கை வாங்கும் என்று அந்நாட்டின் உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கைக்கு இந்தியா அளித்த இலவச கோவிட் தடுப்பூசிகள் சென்றடைந்தன. இதையடுத்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் ஆலோசகர் லலித் வீரதுங்க கூறுகையில், “இந்தத் தடுப்பூசி முதலில் சுகாதார முன்னணி வீரர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
அதில் பாதுகாப்பு படையினர் மற்றும் வயதானவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இது தவிர சீனாவிலிருந்து மூன்று லட்சம் இலவச தடுப்பூசிகள் வரவிருக்கின்றன” என்றார்.
மேலும், “ரஷ்யாவிடமிருந்தும் உதவி கோரப்பட்டுள்ளது” என்றார். ஜனவரி 26ஆம் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் இலங்கையில் 60 ஆயிரம் கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா உலகின் மிகப்பெரிய கோவிட் தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்றாகும். மேலும், கரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெறுவதற்காக அதிக எண்ணிக்கையிலான நாடுகள் இந்தியாவை ஏற்கனவே அணுகியுள்ளன.
கடந்த சில நாள்களில், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மொரீஷியஸ் மற்றும் செஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கும் மானிய உதவியின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளது.
இதுதவிர சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளும் இந்தியாவுடன் மருத்துவ ஒப்பந்தம் கொண்டுள்ளன.
இதையும் படிங்க: கள்ளத்தோணியில் இந்தியா வந்த இலங்கை தம்பதியர் மகனுடன் கைது!