கொலம்போ: கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இலங்கை நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதை அடுத்து ஒன்பது மாதத்திற்கு பின் அந்நாட்டிலுள்ள சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்ந வகையில், முதற்கட்டமாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 186 சுற்றுலாப் பயணிகள் நேற்று (டிச.28) இலங்கை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் அடுத்த பத்து நாட்களுக்கு இலங்கையில் இருப்பார்கள் என அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 24ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 580 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, அர்மேனியா, பெலாரஸ், உக்ரைன் போன்ற சிஐஎஸ் (CIS) நாடுகளைச் சேர்ந்தவர்கள். இலங்கையின் பிரதான வருமானம் சுற்றுலா துறை வாயிலாக கிடைத்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துறை கடும் பாதிப்புக்குள்ளானது.
முன்னதாக, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை அந்நாட்டில் 41 ஆயிரத்து 602 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ரஷ்ய படகு - 17 பேர் மாயம்