சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 கொள்ளைநோய் தற்போது உலகையே சூறையாடி வருகிறது.
நோய் பரவ ஆரம்பித்த நான்கு மாதங்களுக்குள்ளாகவே 26.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, மற்ற நாடுகளைப் போன்று ஊரடங்கு அமல்படுத்தாமல் தீவிரப் பரிசோதனையின் மூலம் கோவிட்-19-ஐ ஆசிய நாடான தென் கொரியா கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்தச் சூழலில், அங்கு மீண்டும் கோவிட்-19 தலைதூக்க வாய்ப்புள்ளதால் எதிர்வரும் இரண்டாம் அலையை எதிர்கொள்ள தயாராகி வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறைக் கூறியுள்ளது.
இதுகுறித்து தென் கொரிய சுகாதாரத்துறை அலுவலரான யோங் டெய்-ஹோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தென் கொரியாவில் கோவிட்-19 மீண்டும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்தமுறை நோயின் தீவிரம் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
தென் கொரியாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நோய்ப் பரவலின் உச்சத்தில் ஒருநாளைக்கு 909 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
அந்நாட்டில் இதுவரை 10 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: வதந்திகளுக்குத் தீனிபோடும் வடகொரிய மௌனம்...