சில சமூகவிரோதக் கும்பல்கள் ரோஹிங்கியா அகதிகளை, சட்டவிரோதமாக மீன்பிடி படகுகளில் ஏற்றிக்கொண்டு ஆபத்தான கடல் பயணங்களின் வழியே மலேசியாவுக்கு அழைத்துச் செல்வது, சமீபக் காலமாக அதிகரித்து வந்ததையடுத்து வங்கதேச அரசு அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில், இன்று ஆட் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட கொள்ளை குழுவைச் சேர்ந்த ஏழு ரோஹிங்கியாக்களை அதிரடி விரைவுப் படை (ஆர்ஏபி) மூன்று மணிநேர துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சுட்டுக் கொன்றுள்ளது.
அரசப்படைகளை நோக்கிச் சென்ற அரசின் கப்பலை கொள்ளை குழுத் தாக்கியதை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிரடி விரைவுப் படை செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஷேக் சாதி தகவல் தெரிவித்துள்ளார். இந்த குழு, ஆட் கடத்தல் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் சோகிர் என்பவரது தலைமையின் கீழ் இயங்கும் ஒரு கொள்ளைக் குழுவென சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மாதம் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் அடங்கிய 138 ரோஹிங்கியா மக்களைக் கொண்ட படகு மலேசியா செல்லும் வழியில் மூழ்கியது. இதில் பயணித்தவர்களில் 44 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைக்கும் படுகொலைக்கும் பயந்து அந்நாட்டிலிருந்து உயிர்பிழைக்கத் தப்பியோடி தென்கிழக்கு வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
அகதிகள் தொடர்பில் வங்கதேச அரசு, மியான்மருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், ரோஹிங்கியா அகதிகள் இதுவரை அங்கு தமக்குப் பாதுகாப்பு இல்லை எனச் செல்ல மறுத்துவருகின்றனர்.
சட்டவிரோத மரண தண்டனைகளில் வங்கதேச அரசின் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மணிலா - வணிக வளாகத்துத்தில் 30 பேர் சிறைப்பிடிப்பு