இலங்கையில் நடந்து முடிந்த எட்டாவது அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கிறார். இவரின் வெற்றிக்கு மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பாலும், கோத்தபய வென்றிருப்பது அங்கிருக்கக்கூடிய தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் எது நடக்கக்கூடாது என்று ஈழத் தமிழர்கள் நினைத்தார்களோ அது நடந்துவிட்டது எனவும் தங்களது அறிக்கைகளில் தெரிவிதித்திருந்தனர்.
இந்நிலையில், ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைத்தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாகச் சிந்தித்தது கிடையாது. அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் செய்ததில்லை. மாறாக தங்களுடைய சுயநல அரசியல் தேவைகளுக்காக எங்களது நாட்டு மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் சுயநல அரசியல் சந்தர்ப்பவாத அரசியலைத் தக்கவைப்பதற்காக இலங்கையில் உள்ள தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், பழ. நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகள் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் இருக்கிறது. இலங்கையில் எங்களது அரசானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நல்லெண்ணத்துடனும் செயல்படும்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி, அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது" என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: யார் இந்த கோத்தபய?