டோக்கியோ: வடக்கு ஜப்பானில் அமைந்துள்ள புகுஷிமா கடலோரப் பகுதியில் இன்று (மார்ச் 16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேலான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.
நிலநடுக்கம் குறித்து ஜப்பான் வானிலை மையம், " இரவு 11.46 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 8.06 மணி) புகுஷிமா அருகே கடலில் 60 கி.மீ., ஆழத்திற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3 அடி உயரத்துக்கு கடல் அலை
மியாகி, புகுஷிமா மாகாணங்களின் சில பகுதிகளில் ஒரு மீட்டர் (3 அடி) உயரத்திற்கு கடல் அலை எழுச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகுஷிமா டைச்சி அணுமின் நிலையம், டோக்கியோ மின் சக்தி நிறுவனத்தின் மேற்பார்வையில் இருந்து வருகிறது. இங்கிருந்த அணுமின் நிலையத்தின் கூலிங் அமைப்பு 2011இல் சுனாமிக்கு பின்னர் பழுதான நிலையில், அங்கு ஏதும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனப் பணியாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
2011இல் 9.0 ரிக்டர்
நிலநடுக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிதா,"அரசு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பிட்டு வருகிறது. மேலும், மீட்பு மற்றும் நிவராண நடவடிக்கைகள் உறுதியான நிலையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் விமானப்படை பைட்டர் ஜெட்கள், புகுஷிமாவில் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த உயிர்ச் சேதமும் பதிவாகவில்லை.
11 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஜப்பானின் வடக்குப் பகுதியில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி ஏற்பட்டு, அணுமின் நிலையங்கள் கடும் பாதிப்பிற்குள்ளானது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்