பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர்-சியால்கோட் மோட்டார் பாதையில் காரிலிருந்த பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபில் உள்ள லாகூரிலிருந்து 30 வயது பெண், தனது குழந்தைகளுடன் காரில் பயணம் செய்துள்ளார்.
லாகூர்-சியால்கோட் மோட்டார் பாதை அருகே அவரது காரில் எரிபொருள் தீர்ந்துபோனது. இதனையடுத்து, காரில் தனது குழந்தைகளுடன் தனியே இருந்த அவரை நோட்டமிட்ட இரண்டு ஆண்கள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரிலிருந்து பிடித்து இழுத்துள்ளனர்.
மேலும், யாருமில்லாத இடத்திற்கு அந்தப் பெண்ணை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதனால் பாகிஸ்தான் எங்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு நிர்வாகம் சீர்குலைந்துள்ளதால் செய்வதறியாது பாகிஸ்தான் காவல் துறையினர் தவித்துவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை நாடிய நிர்வாகம் விசாரணை முடியும்வரை கும்பல் பாலியல் வல்லுறவு குறித்த செய்திகளை ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியது.
இந்த மனுவை இன்று விசாரித்த லாகூர் நீதிமன்ற தலைமை நீதிபதி அர்ஷத் உசேன் பூட்டா, "பஞ்சாப் மாகாணத்தில் நடந்த கும்பல் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளை ஒளிபரப்ப தடைவிதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிமன்ற உத்தரவின்படி கும்பல் பாலியல் வல்லுறவு குறித்த செய்திகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதிக்கிறது.
எனவே அனைத்து செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும் தங்களது செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்த ஒளிபரப்புகளில் லாகூர் நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றன.
கொடூரமான இந்தக் குற்றச் சம்பவம் குறித்து பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதால் பிரதான குற்றவாளியை கைதுசெய்வதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஊடகப் பணி ஆற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.