நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டுத் தொடரில் பாகிஸ்தான் உடனான வெளியுறவுக் கொள்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் பேசினார்.
அப்போது, "பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது. பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து தங்கள் மண்ணில் இடமளித்து வருகிறது. ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறது'' என்றார்.
மேலும், ''பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து நடத்திவரும் அத்துமீறல்களை நிறுத்தவேண்டும். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதக் கொள்கைகளை கைவிடவேண்டும்'' எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், முரளீதரனின் கருத்துகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "பாகிஸ்தான் மீது ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனின் கருத்துகளை பாகிஸ்தான் நிராகரிக்கிறது.
இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல்களும், மாநில அளவிலான பயங்கரவாதமும் அதிகரித்து வருகிறது. இந்தியா உலக நாடுகளை தவறான பாதையில் வழிநடத்த இயலாது.
சட்ட விரோத ஆக்கிரமிப்பு குறித்து இந்தியாவுடன் விவாதிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. பொது வாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அளிக்க இந்தியா முன்வரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் மூலம் இந்திய அரசு செய்து முடிக்கவும் பாகிஸ்தான் விரும்புகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.