கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் அனைத்து வகையான பயணிகள் விமானப் போக்குவரத்தும் மார்ச் 21ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 29ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த இந்தத் தடை உத்தரவு மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், பெஷாவர், குவெட்டா ஆகிய ஐந்து நகரங்களில் முதல்கட்டமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்தைத் தொடங்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கான், "பொதுமக்களின் துன்பத்தைக் கருத்தில்கொண்டு 25 விழுக்காடு விமானங்கள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் வெப்ப நிலையும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். கடந்த இரண்டு வாரங்களில் அவர்கள் மேற்கொண்ட பயண விபரங்கள், உடல்நலம் குறித்த தகவல்களை பயணிகள் வழங்க வேண்டும்" என்றார்.
தனி விமானங்களும் சரக்கு விமானங்களும் அனைத்து விமான நிலையங்களிலிருந்து இயங்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், தற்போது அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மற்றும் தனியாருக்குச் சொந்தமான செரீன்ஏர் ஆகிய இரண்டு விமான நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் பயணிகளை அழைத்துவரும் சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் மற்ற வெளிநாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இதுவரை 40,151 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 873 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: சீனாவைக் கட்டம் கட்டும் அமெரிக்கா - 18 புள்ளி செயல்திட்டம் ரெடி!