இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தனிநபர் அமர்வு நீதிபதி அமர் பரூக் முன்பு இன்று இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. ”இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக இந்து பஞ்சாயத்து நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. இந்து பஞ்சாயத்து நிறுவனம் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி கோயிலைக் கட்டலாம்” என உத்தரவிட்டார்.
மேலும், கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்தார். வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, இஸ்லாமாபாத்தின் நிர்வாகப் பிரிவில் 20 ஆயிரம் சதுர அடியில் கிருஷ்ணர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு இந்த கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.