நேற்று மாலை நேபாளத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எவரெஸ்டின் உயரத்தை அறிவிக்க நேபாளத்தின் நில மேலாண்மை அமைச்சகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான உயரம், தற்போது கூறப்படும் உயரத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தற்போது, அதிகாரப்பூர்வமாக அளந்த உயரத்தின் அளவை வெளியிட நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து நேபாளத்தின் நில மேலாண்மைத் துறை அமைச்சர் பத்ம குமாரி ஆர்யல் கூறுகையில், “எங்கள் சொந்த கருவிகள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவரெஸ்டின் உயரத்தை அளவீடு செய்துள்ளோம். அதை விரைவில் அறிவிக்கப்போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2015இல் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து ஏராளமான சந்தேகம் எழுந்துவருவதால், 2017ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான சிகரத்தை அளவிட மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது.
சீனத் தரப்புடன் ஒப்புக் கொண்டபடி, கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையின்போது, நேபாளமும் சீனாவும் இணைந்து காத்மாண்டு, பெய்ஜிங்கில் எவரெஸ்டின் உயரத்தை ஒரே நேரத்தில் அறிவிக்க முடிவு செய்திருந்தனர். இரு நாடுகளும் கடந்த ஆண்டு அக்டோபரில் கூட்டாக உயரத்தை அறிவிக்க ஒப்பந்தம் செய்தன.
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8,848 மீட்டருக்கு எதிராக 2015ஆம் ஆண்டில் சீனா ஒருதலைபட்சமாக எவரெஸ்டின் உயரத்தை 8,844.04 மீட்டர் என்று அறிவித்ததையடுத்து, சீனாவின் அளவீட்டில் நேபாளம் முரண்பட்டுள்ளது.
எவரெஸ்டின் உயரம் குறித்த வேறுபாடுகள் உள்ளதால், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளும் எல்லை நெறிமுறையில் கையெழுத்திட முடியவில்லை. எவரெஸ்டின் தற்போதைய உயரம் 1954ஆம் ஆண்டில் இந்திய கணக்கெடுப்புக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை 8,848 மீட்டராக கருதப்படுகிறது. எவரெஸ்டின் உயரத்தை மறுபரிசீலனை செய்வதாக நேபாளம் அறிவித்த பின்னர், இந்தியாவும் ஆர்வம் காட்டியது. ஆனால் நேபாளம் தனது கருவிகள், தொழில்நுட்பங்களை வைத்தே அளவிடும் என்று கூறி இந்தியாவின் விருப்பத்தை நிராகரித்தது.
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பனி உயரத்திற்கு எதிராக 2015ஆம் ஆண்டில் சீனா எவரெஸ்டின் பாறை உயரத்தை கொண்டுவந்ததால், இப்போது நில மேலாண்மை அமைச்சர் பத்ம குமாரி ஆர்யலின் கூற்றுப்படி, இப்போது சீனாவும் எவரெஸ்டின் பனி உயரத்தை மட்டுமே கருத்தில்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது எனத் தெரிகிறது. எவரெஸ்டின் உயரத்தை அறிந்துகொள்ள பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.