உத்தரகாண்ட் மாநிலம், நேபாள எல்லையை ஒட்டி உள்ள பகுதிகள் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா. இந்த பகுதிகளுக்கு நேபாளம் நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், கைலாஷ் - மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களின் பயண தூரத்தை சுருக்கும் வகையில், உத்தரகாண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலே வரை 80 கி.மீ. நீளத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் (மே) எட்டாம் தேதி திறந்து வைத்தார்.
இதற்கு நேபாள நாட்டின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனைத் தொடர்ந்து, லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளாக சித்தரித்து, கடந்த மாதம் 20ஆம் தேதி அந்நாட்டு அரசு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது.
நேபாள அரசின் இந்த புதிய வரைபடத்தை காட்டமாக விமர்சித்த இந்தியா, அதனை அங்கீகரிக்க மறுத்தது. இந்த சம்பவம் தொடங்கி நேபாள - இந்தியா எல்லைக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, மூன்று இந்திய எல்லைகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை அங்கீகரிக்கும் வகையில், நேபாள அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா, நேற்று அந்நாட்டு நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சர்ச்சைக்குரிய மசோதா அந்நாட்டின் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சிகள் என அனைவரின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது. இது இந்திய - நேபாள நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கை அதிகரிக்கும் என்பதால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கரோனா!