உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான ஷெபாஷ் ஷெரிப்பிற்கு கரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவரான அதாவுல்லா தாரர், ஷெபாஷ் ஷெரிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பலமுறை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தும் பாகிஸ்தான் தேசிய அமைப்பு பணமோசடி வழக்கில் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி வற்புறுத்தியது. மற்றவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டிலும், ஷெபாஷுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவே.
இதையறிந்தும் பண மோசடி வழக்கின் விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்தியதாலே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கு அந்த அமைப்பே காரணம் என்றார்.