ரம்ஜான் பண்டிகையையொட்டி மத குருக்கள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் மசூதிகளைத் திறக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். தொழுகை நடத்துபவர்கள் தகுந்த இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
"இந்தச் சூழ்நிலையில், மசூதிகளைத் திறப்பது சரியான முடிவு அல்ல; அவை கரோனா பரவும் ஹாட்ஸ்பாட் மையங்களாக மாறும்" என பாகிஸ்தான் இஸ்லாமிய மருத்துவச் சங்கத்தின் செயலாளர் இப்தார் பர்னே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்திப்பின்போது, "கடந்த ஆறு நாள்களில் மட்டும் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து 12,657-ஐ எட்டியுள்ளது. உயிரிழப்புகள் 265ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 200 மருத்துவப் பணியாளர்கள், 100 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 'ஸ்மார்ட் லாக் டவுன்' வேலைசெய்யாது என எச்சரித்த அவர், மக்களை நீண்ட நாள்களுக்கு ஸ்மார் லாக்டவுனின் கீழ் வீடுகளில் வைத்திருக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். பாகிஸ்தானில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்நாட்டு மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் இஸ்லாமிய மருத்துவச் சங்கம் மட்டுமல்லாது பிற சுகாதார அமைப்புகளும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து சிந்தி இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய மாகாண அரசு," மசூதிகளை மீண்டும் திறக்கும் அரசின் முடிவை ஏற்காது. ரம்ஜான் காலத்தில் அது மூடியே இருக்கும்" என அறிவித்துள்ளது.
மசூதிகளைத் திறப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வீட்டிலேயே இருந்து வழிபாடுசெய்து நோன்பு துறக்கலாம் என மக்களைக் கேட்டுக்கொள்வதாக பாகிஸ்தான் மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் கைசர் சஜ்ஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள வல்லுநர்களுடன் நட்டா ஆலோசனை