17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 345 இடங்களை கைப்பற்றி அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி மீண்டும் அரியணை ஏற உள்ளார். இதற்கிடையே, மோடிக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், சீனாவின் கியுஷூ மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான மூ டிகுய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், "மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. நல்லாட்சி, இந்தியாவின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மோடி அயராது உழைத்து வருகிறார். மோடியால், இ்ந்தியா, சீனா அமைதியான முறையில் பொது இலக்கை அடையும்" என்றார்.
மேலும், இந்தியாவின் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த அங்கு தொழில்களை சீனா மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.