சமீப காலங்களாக ஸ்மார்ட்ஃபோன்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் பற்றிய விழிப்புணர்வுகள் மக்களிடம் இருந்தாலும் அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தவறுகின்றனர். அந்த தவறினால் 14 வயது சிறுமியின் உயிர் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானினில் உள்ள பாஸ்பேட் கிராமத்தில் வசிப்பவர் 'ஆல்வா அசெட்கிஸி அப்சல்பெக்' என்னும் 14 வயது சிறுமி. இவர் நேற்று இரவு தூங்கும் போது செல்ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சார்ஜ் போட்டுவிட்டு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து மகளின் அறைக்குள் சென்று அவரது தாய் பார்த்துள்ளார். அப்போது சிறுமி மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி, ஏற்கெனவே இறந்து விட்டார் என அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல்துறை நடத்தப்பட்ட விசாரணையில், "சிறுமியின் செல்ஃபோன் இரவு முழுவதும் சார்ஜில் போடப்பட்ட காரணத்தினால் அதிகளவில் வெப்பம் வெளியேறி செல்ஃபோனின் பேட்டரி வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவம் சிறுமியின் அருகிலேயே நடைபெற்றுள்ளதால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதனால் பயனாளர்கள் அதிக நேரம் செல்ஃபோனுக்கு சார்ஜ் போடுவது, சார்ஜ் போட்டுக்கொண்டே அலைபேசியில் பேசுவது, தரம் குறைந்த சார்ஜரை வாங்கிப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்த்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும்.
இதையும் படிங்க: இளம்பெண் உயிரைப் பறித்த செல்போன் - குளிக்கும்போது நடந்த விபரீதம் !