சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று தற்போது 195-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்தத் தீநுண்மி தொற்று காரணமாக இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 தொற்று காரணமாகப் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் டோங்ரென் மருத்துவமனையைச் சேர்ந்த ஜின்-குய் யாங் உள்ளிட்ட சிலர் தாங்கள் சிகிச்சையளித்த 43 பேர் உள்பட 1056 பேரின் தரவுகளை ஆய்வுசெய்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றையும் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ஸ் தொற்றையும் கரோனா என்ற ஒரே தீநுண்மிதான் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சார்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 524 பேரின் தரவுகளையும் ஆய்விற்குள்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து ஜின்-குய் யாங் கூறுகையில், "ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஆண்கள் அதிக அளவில் தீநுண்மி தொற்றால் உயிரிழப்பதைக் கவனித்தோம். இதனால் கரோனா தீநுண்மியால் ஆண்கள் அதிக அளவில் உயிரிழக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆய்வை மேற்கொண்டோம்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் இடர் ஆண், பெண் என இருவருக்கும் சரிசமமாக இருந்தாலும் இப்பெருந்தொற்றால் ஆண்களே மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவரை தீநுண்மியால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள்தான். அதாவது தொற்றால் உயிரிழக்கும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கு 2.5 மடங்கு அதிகம்.
குறிப்பாக ஏற்கனவே மற்ற உடல்சார்ந்த பிரச்னைகளைக் கொண்டுள்ள ஆண்களுக்குக் கூடுதல் சிறப்புச் சிகிச்சை தேவைப்படும். 2003ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் தொற்றிலும் ஆண்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
மேலும், கரோனா தீநுண்மி தொற்று பரவலுக்குக் காரணமான ஏ.சி.இ.2 (ACE2) புரதம் ஆண்களுக்கு அதிகமாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு மிகக்குறைவான நபர்களின் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிக பேரின் தகவல்களுடன் விரைவில் இது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போரைவிட கரோனாவில் அதிகம்: அமெரிக்காவின் துயர நிலை