பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்தாண்டு பதவியேற்றதையடுத்து, மலேசியாவுக்கு நவம்பர் மாதம் இம்ரான்கான் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், மூன்று நாள் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் செல்லும் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, இம்ரான்கானை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்கள்கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஷான் -இ என்னும் பாகிஸ்தானின் உயரிய விருதை மகாதீருக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வழங்க உள்ளார். மேலும்,மார்ச் 23ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய தினத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மகாதீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
முன்னதாக, மலேசிய பிரதமர் பயணம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாதீரின் இந்த பாகிஸ்தான் வருகை இரு நாடுகளுக்கிடையே இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே புல்வாமா மற்றும் அதற்கு பிந்தைய தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் மலேசிய பிரதமரின் பாகிஸ்தான் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.