கடந்த வாரம், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் நிபந்தனைகளை விதித்தது. இதனால் இந்தியாவுக்கு அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யும் மலேசியா கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறிவரும் கருத்துகளுக்கு பதிலாகவே இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, "இந்தியாவுக்கு அதிக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்வது மலேசியாதான். இதனால் இந்த அறிவிப்பு குறித்து நாங்கள் கவலைகொள்கிறோம்.
இருப்பினும் ஏதாவது தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அதற்கு எதிரான கருத்துகளை கண்டிப்பாக பதிவு செய்வோம். வெறும் பணத்தைப் பற்றி மட்டும் சிந்தித்துவிட்டு தவறு நடக்கும்போது பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால், பிறகு நிறைய விஷயங்கள் தவறாக நடக்கத் தொடங்கும்.
இன்று இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் பாகுபாடு காண்பது தவறு என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது" என்றார்.
மேலும், பாமாயில் இறக்குமதி குறித்து வேறு ஒரு தீர்வை சிந்திக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் அறிவிப்பு தொடர்பாக மலேசிய முதன்மை தொழில்துறை அமைச்சர் கூறுகையில் "மலேசியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கு பதிலாக சுத்திகரிக்கப்படாத பாமாயிலை அதிகமாக ஏற்றுமதி செய்வதையே இந்திய வியாபாரிகள் இப்போது விரும்புகின்றனர்" என்றார்.
ஆண்டு ஒன்றுக்கு இந்தோனேசியாவுக்கு(43 மில்லியன் டன்) அடுத்து மாலேசியாதான் (19 மில்லியன் டன்) அதிக பாமாயிலை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடியின் வெளியுறவுக் கொள்கையின் புதிய ஆயுதம்...!