பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தண்டனை அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்று கூறி தண்டனையை நிறைவேற்ற தடைவிதித்தது. லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் முஷாரப்புக்கு இடைக்கால நிவாரணம் கிடைத்தது.
இந்த நிலையில் லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, பாகிஸ்தான் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், லாகூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2007ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பர்வேஸ் முஷாரப் அவசரநிலையை கொண்டுவந்தார். அப்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்தது என்று முஷாரப் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்தது.
இதையும் படிங்க: நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொடுத்த நாட்டுப்புற கவிதை: சாதனை பெண்மணி சாந்தி