அமெரிக்காவிலிருந்து பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கான நீண்டகால தடையை தைவான் அதிபர் சாய் இங்-வென் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீக்கியது. இது அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையில் அரங்கேறிய முதல் படியாக கருதப்படுகிறது. இந்த தடை நீக்கம் ஜனவரி மாதத்தில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேஎம்டி கட்சியின் உறுப்பினர்கள் இன்று (நவம்பர் 27) பன்றி இறைச்சிகளை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தடுப்பதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்கையில், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.