வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு, வாய்மொழியில் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என்று வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வாழ்த்துச் செய்தியில், “தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறார். சீன மக்களையும், ஒட்டுமொத்த நிலைமையையும் திட்டங்கள் மற்றும் ராஜதந்திரங்கள் வாயிலாக கட்டுப்படுத்துகிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டு மக்களுக்கு இதுவரை செய்த வெற்றிகளை உறுதிப்படுத்தி, அவற்றை விரிவுப்படுத்த வேண்டும். அம்மக்கள் அதிபர் ஜி ஜின்பிங்கின் புத்திசாலித்தனமான வழிகாட்டுதலின் கீழ் இந்த வெற்றியை பெறுவார்கள்” என கூறப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் வாயிலாக தெரியவருகிறது.
சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்ட கரோனா வைரஸ் கோவிட்-19 பாதிப்புகள், மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து சீனா ஜனவரியில் தனது வடகொரிய எல்லையை மூடியது. இந்நிலையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜின்பிங் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளையும் கிம் பாராட்டியுள்ளார்.
அண்மையில் கிம் ஜாங் உன், கடந்த 21 நாள்களாக பொதுநிகழ்ச்சிகள் மற்றும் அந்நாட்டின் தேசிய விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானது. அந்த வதந்திகளை எல்லாம் தாண்டி கிம், சில நாள்களுக்கு முன்பு உர தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது சீன அதிபருக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.