ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சீர்செய்ய முக்கிய முன்னெடுப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசு, தலிபான், ஆப்கான் அரசு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய தரப்பினராக உள்ளனர். அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அந்நாட்டுக்குத் திரும்பப் பெறும் நோக்கில், ட்ரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
இந்த நடவடிக்கையானது, அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான்-தலிபான் ஆகியோருக்கு இடையே பரஸ்பர அமைதியை உருவாக்கும் விதமாக, அமெரிக்க நிர்வாகிகள் முயற்சி செய்துவருகின்றனர். அதன்படி, ஆப்கான் சிறையில் உள்ள 5 ஆயிரம் தலிபான் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என, இந்த அமைதி ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து இதுவரை சுமார் 4 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்டமாக மீதமுள்ள ஆயிரம் கைதிகளையும் அரசு விடுவிக்கத் தொடங்கியுள்ளது. 86 கைதிகளை தற்போது விடுவித்துள்ள அரசு, மீதமுள்ள நபர்களையும் விரைவில் விடுவிக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கு பரஸ்பரமாக தலிபான் வசமுள்ள சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலுள்ள அரசு, ராணுவ கைதிகளை விடுவிக்கவுள்ளோம் என, அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. மேலும், அரசு தரப்பு-தலிபானுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீன ஆக்கிரமிப்பு செய்தி வெளியிட்ட நேபாள பத்திரிகையாளர் மரணம்