தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் முதல் முறையாக அதிபர், துணை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களை ஒரே நேரத்தில் தேர்தெடுக்கும் பொதுத்தேர்தல் கடந்த ஏப்.17ஆம் தேதி நடைபெற்றது. வாக்களிக்க தகுதிபெற்ற 192 மில்லியன் மக்கள், இந்த தேர்தலில் பங்கேற்றனர். மொத்தமுள்ள 575 நாடாளுமன்ற இடங்களுக்கு 16 கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில், வாரக்கணக்காக எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவுற்றது. தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிபர் ஜோகோ விடோடோவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிரபுவோ சுபியாண்டோ போட்டியிட்டார். இதில், ஜோகோ விடோடோ 55.5 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுபியாண்டோ 44.5 விழுக்காடு வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மீண்டும் அதிபராக ஜோகோ விடோடோ தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே, தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ள சுபியாண்டோ வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார். அதே சமயம், தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.