உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது, கரோனா வெர்ஷன் 2.0 என கூறப்படும் உருமாறிய கரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக ஜப்பான் சார்பில் இந்தியாவுக்கு 30 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் 2,113 கோடி) கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனுதவிக்கான ஒப்பந்தமானது இந்தியாவின் கூடுதல் செயலாளர் மொஹாபத்ரா மற்றும் ஜெய்காவின் தலைமைப் பிரதிநிதி கட்சுவோ மாட்சுமோட்டோ இடையே கையெழுத்தானது.
கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் ஒருங்கிணைந்த மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஆதரிக்கும் நோக்கிலேயே இந்தக் கடனுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.