குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 9ஆம் தேதி தென் கிழக்காசியாவில் உள்ள வியட்நாம் நாட்டுக்குப் புறப்பட்டு சென்றார்.
சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று, வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, இந்தியத் தூதரகத்தில் ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் தொடர்பான சிறப்பு முகாமினை வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "இந்த முகாம் அண்ணலின் 150ஆவது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் நடத்தப்படுகிறது. ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சுதந்திரம் தர வழிவகுக்கின்றன. ஜெய்ப்பூர் கால்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவுகின்றன", என தெரிவித்தார். ஜெய்ப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கைக் கால்கள் ரப்பரால் உருவாக்கப்படுபவை ஆகும்.