கடந்த ஒருமாதமாக நிலவிவரும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து, காணொலி காட்சி வாயிலாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ ஃபேரல், "இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை இருதரப்பினரும் பேசித் தீர்க வேண்டிய பிரச்னையாகும்.
இதற்குள் அந்நிய நாடுகள் தலையிடுவது முறையல்ல. தென் சீனக் கடலில் சீன கடற்படையின் அத்துமீறல்களும், ஹாங்காங்கிற்கு எதிராகச் சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாதுகாப்பு மசோதாவும், ஆஸ்திரேலியாவைக் கவலை அடையச் செய்துள்ளது" என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாடு குறித்து பேசிய அவர், "வரும் வியாழக்கிழமை பிரதமர்கள் நரேந்திர மோடி, ஸ்காட் மாரிசன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆன்லைன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
இந்த ஆன்லைன் உச்சி மாநாடு இந்திய-ஆஸ்திரேலியா நல்லுறவை வரலாறு காணாத அளவுக்கு வலுப்படுத்தும்" எனக் கூறினார். மேலும், கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, இரு நாட்டுப் பொருளாதாரம் மீண்டெழும் எனப் பேரி ஓ ஃபேரல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கிரண் பேடி!