டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. கரோனா அச்சம் இருப்பதால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை தடையின்றி நடத்திட ஜப்பான் அரசு சார்பில் பிரத்யேக குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஒலிம்புக் போட்டிகளை ஒத்திவைப்பதற்கான செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் விளையாட்டுகளை குறைப்பது மட்டுமின்றி கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையை முடிவு செய்வதற்காகவும் போட்டி ஏற்பாட்டு குழுவுடன் ஒலிம்பிக் கமிட்டி கலந்துரையாடி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா பதவியேற்றுள்ளதால், அவரை காண சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அடுத்த மாதம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் கமிட்டி தலைவரும், ஜப்பான் பிரதமரும் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொலைபேசி மூலம் உரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.