ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் சிக்கலான உறவின் காரணமாக ஈரானுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ட்ரம்பின் அரசு விதித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட ட்ரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் விதமாக பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார்.
ஈரானின் அடிப்படை மூலதனமாகக் கருதப்படும் கச்சா எண்ணெய்யின் விலையை உயர்த்தி அந்நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில், அரசின் நடவடிக்கையை எதிர்த்து கடந்த மூன்று நாட்களாகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு இணையச் சேவையை தற்போது முடக்கியுள்ளது. தகவல் தொடர்பைத் துண்டிக்கும் ஈரான் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ள ட்ரம்பின் அரசு, ஈரான் மக்களின் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டின் உச்ச பட்சத் தலைவராகக் கருதப்படும் மத குருவான ஆயதோலாஹ் காஃமேனி ஆதரவு தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களைப் பொறுக்கிகள் எனத் தெரிவித்துள்ள காஃமேனி கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி அரசு எடுத்துள்ள முடிவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இருவர் இணைந்தால் தமிழர்களுக்கு நல்ல காலம் - எஸ்.ஏ.சி ஆருடம்