கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. கரோனாவை விரட்டியடிக்கத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பணி பல நாடுகளில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாததால், மக்களை ஈர்த்திட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், இந்தோனேஷியாவில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாகக் கோழி வழங்கப்படுகிறது.
சிப்பனாஸ் என்னும் பகுதியில், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டியுள்ளனர். தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்கள், அப்பகுதியில் உலாவிவந்துள்ளன. முதியவர்கள் பலரும், தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்திலிருந்துள்ளனர்.
இதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியவர்களுக்கு இலவசமாக உயிருடன் உள்ள கோழி ஒன்று வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, முதியவர்கள் பலரும் ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கோழியை வாங்கிச் செல்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் வீடுகளில் சிக்கன் விருந்துதான்!
இந்தோனேஷியாவில் இதுவரை ஐந்து விழுக்காடு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பூசி போடலனா சிம்கார்டு கனெக்ஷன் கட்!'