ஜகார்டா (இந்தோனேசியா): கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலானது மூன்று துண்டுகளாக சிதறிய நிலையில் கடலுக்குள் காணப்படுவதாக இந்தோனேசிய அலுவலர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது.
நேற்றைய தினமே 800 அடி ஆழத்திலிருந்து நீர்மூழ்கி கப்பலின் சமிக்ஞை கிடைத்தது என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சிதைவுகளை படம்பிடிப்பதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நீர்மூழ்கி கருவியை கடலுக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது.
இதன்மூலம், நீர்மூழ்கி கப்பலின் பொருட்கள், நங்கூரம், அதிலிருந்தவர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகள் ஆகியவை கண்டறியப்பட்டதாக கப்பற்படை அலுவலர்கள் அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.
கே.ஆர்.ஐ.நங்கலா 402 என்ற இந்த நீர்மூழ்கி போர் கப்பல் எதிரி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பெடோ பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது கப்பலானது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போன கப்பலை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.