2019ஆம் ஆண்டுக்கான ஐ.நா. ராணுவ பாலின வழக்கறிஞருக்கான விருது இந்தியாவின் ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் சூழ்நிலைகளில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காகவும், கண்காணிப்பு அலுவலராகவும் பெண் ஒருவர் ராணுவ மிஷன்களில் இருக்க வேண்டும். அவர்களை 'அமைதி காக்கும் படை' என அழைப்பர்.
தெற்கு சூடானில் ஐ.நா.சபையால் நடத்தப்பட்ட மிஷனுக்கு ராணுவ கண்காணிப்பாளராக சுமன் கவானி இருந்தார். அதில் 230 அமைதிக்காப்பாளர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.
அதனைத்தொடர்ந்து தெற்கு சூடான் அரசின் பாதுகாப்பு படையினருக்கு பயற்சியளித்ததோடு மட்டுமல்லாமல், மோதல் சூழல்களில் எவ்வாறு பெண்களுக்கு எதிரானப் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது என்பது பற்றியும் திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். இந்த மிஷனில் சிறப்பாக செயல்பட்டதால், கவானிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை சுமன் கவானியுடன், பிரேசில் கடற்படை அலுவலர் கார்லா மான்டெய்ரோ பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் பேசுகையில், ''இந்த அமைதிக் காப்பாளர்கள் மிகவும் சக்திவாய்ந்த முன்மாதிரிகள். அவர்கள் தங்கள் பணிகளில் புதிய கண்ணோட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் நாங்கள் சேவை செய்யும் சமூகத்தினரிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என புகழாரம் சூட்டியுள்ளார். இந்த விருது சர்வதேச ஐ.நா. அமைதிக்காப்பாளர்கள் தினமான மே 29ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ராணுவ அலுவலர் வென்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தண்ணீர், சுகாதாரம்: கோவிட்-19க்கு எதிராக உலக தலைவர்கள் அணி திரள வேண்டும்!