'வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை அடைவது' (Achieving Sustainbale Goals) என்ற தலைப்பில் 4ஆவது கிழக்கு ஆசிய அவைத் தலைவர்களுக்கான மாநாடு மாலத்தீவில் நடைபெற்று. இதில், இந்தியா சார்பாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கலந்துகொண்டார்.
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாகிஸ்தான் நாடாளுமன்ற துணைத் தலைவர் ஹசிம் சூரி பேசுகையில், "...காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது" என தெரிவித்தார்.
அவரைக் குறுக்கிட்டுப் பேசிய ஹரிவன்ஷ், "எங்கள் உள்நாட்டுப் பிரச்னையை இந்த மாநாட்டில் எழுப்புவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், இம்மாநாட்டிற்குச் சம்பந்தமில்லாத பிரச்னையை எழுப்பி யாரும் அரசியல் செய்யவேண்டாம். இதுபோன்று கருத்துகளை ஆவணப்படுத்தாமல் அழித்துவிடவேண்டும். மேலும், பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மையைக் காக்க பயங்கரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதனிடையே, இதனைக் கண்டித்து வெகுண்டெழுந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் குராட் உல் அன் மரீ, "...வளங்குன்றா வளர்ச்சி என்பதில் பெண்கள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆகியவையும் உள்ளடங்கும். மனித உரிமை இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது. காஷ்மீர் வன்முறையின் பிடியில் உள்ளது" என்றார்.
இந்த வாக்குவாதத்தை நிறுத்தக் கோரி மாலத்தீவு அவைத் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியும், பாகிஸ்தான்-இந்தியா பிரதிநிதிகள் இடையே தொடர்ந்து சொற் போரில் ஈடுபட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.