ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தால், அந்த நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா உலக அரங்கில் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சாம்பியன்களில் ஒருவரை இழந்துள்ளது. ஜப்பானிய கொள்கையில் இந்தியாவை முக்கிய நிலைக்கு கொண்டு வருவதற்கு அபே தனிப்பட்ட முறையில் நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
"ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உலகளாவிய கூட்டாண்மை" மேம்படுத்துவதற்கான அடித்தளம் 2001ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டிருந்தாலும், 2005ஆம் ஆண்டு முதல் வருடாந்திர இரு தரப்பு உச்சி மாநாடுகளை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும், அபே இவற்றின் வேகத்தை துரிதப்படுத்தினார்.
ஜப்பான் அதிபராக அவர் முதலில் பதவியேற்ற காலத்தில், அவர் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இரு கடல்களின் சங்கமம்” (“Confluence of the Two Seas”) என்ற தனது உரையில், இருநாட்டு உறவு குறித்த தனது பார்வையை தெளிவாக விளக்கிப் பேசினார்.
2012ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபரான பின் அவர், குடியரசு தின தலைமை விருந்தினராக உட்பட மூன்று முறை இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இதன் மூலம் இந்திய பிரதமருடன் தனிப்பட்ட முறையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தினார்.
அபே மற்றும் நரேந்திர மோடி இருவருக்குமான நட்பு என்பது பலருக்கும் அசாதாரணமாக ஒன்றாக தோன்றும். ஏனென்றால், அபேவின் தாத்தா நோபுசுகே கிஷி 1957-60 ஆண்டுகளில் ஜப்பான் அதிபராக இருந்தார். அதேபோல, அவரது தந்தை ஷின்டாரோ அபே வெளியுறவு அமைச்சராக இருந்தார்.
மேலும், அபேவின் மாமா ஐசாகு சாடோ பிரதமராக நீண்ட காலம் இருந்தார். அதே நேரம் மோடி தானாக உழைத்து அடிமட்டத்தில் இருந்து உயர்ந்துள்ளார்.
வலுவான தேசியவாத கண்ணோட்டங்கள், ஜப்பானிய மூலதனத்தை சீனாவிலிருந்து வெளியேற்ற அபே எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை தேசிய நலன்களின் பெருகிய ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்தது. இதுமட்டுமல்லாமல், இது இருநாட்டு தலைவர்களுக்கிடையே தனிப்பட்ட பிணைப்பையும் ஏற்படுத்தியது. அபே தனது குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய வீட்டில் மோடிக்கு விருந்தாளித்தார். வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அங்கு விருந்தளிப்பது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தால், அபே பதவியில் இருந்த காலத்தில் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஜப்பான் எடுத்தது. அதே நேரத்தில் சீனாவுக்கு எதிராக மற்ற நாடுகளுடன் இணைந்து ஜப்பானும் உறுதியாக நின்றது.
ஜப்பான் மற்றும் இந்தியா தவிர, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளை ‘குவாட்’ அமைப்பின் மூலம் ஒன்றிணைப்பதில் அவர் முக்கிய நபராக செயல்பட்டு வருகிறார். இது சீனாவுக்கு தனது நிலைப்பாடு குறித்து ஜப்பான் அளித்துள்ள தெளிவான ஆனால் உறுதிப்படுத்தப்படாத சமிக்ஞையாகும்.
சர்வதேச அளவில் முக்கிய தலைவராக அபே உருவெடுத்தபோதிலும், சொந்த நாட்டிற்குள் அவரால் மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. குறிப்பாக அவரது தேசியவாத கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கும் வரலாற்றைத் திருத்துவதற்கும், குறிப்பாக ஜப்பானின் காலனித்துவ வரலாறு மற்றும் போர்க்கால சுரண்டல், வன்முறை ஆகியவற்றில் ஜப்பானிய ஆயுதப்படைகளின் பங்கு ஆகியவை குறித்து அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகவில்லை.
பாதுகாப்பு துறை குறித்து அவர் அரசு சமீபத்தில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், அவர் ஜப்பானின் பாதுகாப்பு படைகளை தேவையான நிலைகளுக்கு பலப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தியாவுடன் ஜப்பானின் உறவு மேம்பட்டுள்ள நிலையில், 2 + 2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு முயற்சி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தை 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. மேலும், ஒரு ராணுவ தளவாட கொள்முதல் ஒப்பந்தம் குறித்தும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இருதரப்பு உறவுகளை மோடியும் அபேவும் “சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டு” என்ற நிலைக்கு எடுத்துச் சென்றனர். அணுசக்தி தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடான ஜப்பான், என்.பி.டி அல்லாத நாடான இந்தியாவுடன் ஒரு ஆரம்ப சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது பொதுமக்கள் அணுசக்தி, பயங்கரவாத எதிர்ப்பு, கடல் பாதுகாப்பு, புல்லட் ரயில் போன்ற பல தரப்பட்ட திட்டங்களை உள்ளடக்கியது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை முன்னேற்ற ஜப்பான் பெரிய அளிவில் முதலீடுகளை செய்துள்ளது.
இந்தோ-பசிபிக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், 2017ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா-சீனா படைகள் மோதிக்கொண்டபோதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலின்போதும், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஜப்பான் எடுத்தது. மேலும், சீனாவின் நடத்தை பகிரங்கமாக விமர்சித்த ஜப்பான், எல்லையில் பழைய நிலை திரும்ப வேண்டும் என்ரும் வலியுறுத்தியது
அதேபோல ஜம்மு-காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட இந்திய உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்து ஜப்பான் ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை. ஜப்பானின் இந்த அனுகுமுறை காரணமாக அபே தனது 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குவாஹாட்டி மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானை அதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர் என்ற பெயரைப் பெற்றுள்ள 66 வயதான அபேவின் பதவி காலம் செப்டம்பர் 2021ஆம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால், அதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே உடல்நலம் காரணமாக அவர் பதவி விலகினார். அப்போது அவர் முடிக்கப்படாத பணிகளுக்காக ஜப்பான் மக்களிடையே மன்னிப்பு கோரினார்.
அபே தனது உரையில், ஜப்பானில் அவர் மேற்கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி, பொருளாதார கொள்கை குறித்து அவபர் பேசியிருக்கலாம். ஆனால், அவர் ஜப்பான் மக்களிடம் மன்னிப்பை கேட்டார். இது அவரது பண்புகளை வெளிப்படுத்தியது.
அபேயின் திடீர் ராஜினாமா அவரது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள் சில எழுச்சியைத் தூண்டும். அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடைபெறும்வரை கட்சி தேர்ந்தெடுக்கும் நபர் ஆட்சியில் இருப்பார்.
அவருக்கு பின் பிரதமர் பொறுப்பிற்குவரும் நபர், இந்தியாவுடனான உறவை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஜப்பான் நடைபெறவிருக்கும் அரசியல் மாற்றங்களை இந்தியா ஆர்வத்துடன் எதிர்நோக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.